DTEC - Road Map
புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு
உலகத் தமிழ்க்கல்வி கழகம்
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க, வரும் தலைமுறைக்குத் தங்கள் வேர்களை அடையாளம் காட்ட நிறுவப்பட்ட “கலிஃபோர்னியா தமிழ்க்கல்விக் கழகம்”, இன்று “உலகத் தமிழ்க்கல்விக் கழகமாக” வளர்ந்துள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழை எளிமையாகக் கற்கவும், கற்பிக்கவும், கற்றவைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழ்க் கல்வியாளர்களுடன் இணைந்து உலக தமிழ்க்கல்விக் கழகம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை நடத்தி வருகிறது.
உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தின் நோக்கங்களும் திட்டங்களும்
1. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, சிறந்த தமிழ்க்கல்வியைக் கற்பிக்க தேவையான உதவிகள் செய்தல்.
- நாம் கற்றவைகள், அனுபவங்கள், தமிழ்க் கல்விமுறைகள், மற்றும் பாடப்பொருட்களை அனைத்து தமிழ்ப் பள்ளிகளுடனும் பகிர்ந்துக்கொள்ளுதல்.
- இணையம் மூலம், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை மற்ற பள்ளிகளுடனும், தமிழ் அறிஞர்களுடன் பகிர்ந்து ஒரு நல்ல தீர்வைப் பெற வழிவகுத்து கொடுத்தல்.
- அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இணையக் கல்வி (eLearning) மற்றும் மின் புத்தகத்தில் தமிழ்க் கற்பிக்க தேவையான உத்திகள், பாடப்பொருட்கள், மற்றும் தேவையான அளவு தொழில்நுட்பங்களை உருவாக்குதல்.
2. மாணவர்கள் மனதில் தமிழ் மீது ஆர்வம் உண்டாகும் வகையில் தமிழ்க் கற்றுக்கொடுத்தல். அதுமட்டும்மல்லாது நம் மாணவர்களுக்கு அவர்கள் அடையாளம் பற்றிய புரிதலை உணரவைத்து தமிழ் அடையாளத்தோடு வாழ வழிவகைச் செய்தல்.
- இன்றைய காலச்சூழலில் வாழும் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்வி முறைகள் மற்றும் தேர்வுமுறைகளை மாற்றி அமைத்து அவர்களுக்கு தமிழ்க் கற்றுக் கொடுத்தல்.
- எந்த அளவு எப்படிப்பட்ட முறையில் இலக்கணம் கற்றுக்கொடுப்பது என்கிற திட்டங்களைத் தீட்டி அதற்கேற்ப நம் கல்விமுறைகளை வகுத்தல்.
- மாணவர்களின் தமிழ் திறனை மேலும் வளர்க்கவும், அதை பயன்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
- மாணவர்களை மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மாணவர்களோடு இணையம் மூலமோ, நேரிலோ சேர்ந்து செயல்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
3. பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் சரியான வகையில் அவர்களுக்கு கொண்டு செல்ல வழிவகைகள் செய்தல்.
- தமிழ்மொழியை புலம்பெயர் நாடுகளில் தமிழல்லாத சூழ்நிலையில் வாழும் மாணவர்களுக்கு, எதை எப்படி கொண்டு சென்றால் சரியாக இருக்கும் என்கிற வழிமுறைகளை அனுபவமிக்க கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் கருத்துக்களைக் கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்துதல்.
4. மொழிக்கல்வி பற்றிய முறைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை பள்ளியிலும் கல்வித்திட்டத்திலும் செய்தல்.
- ஆசிரியர்களுக்கு மொழிக்கல்வி பற்றிய ஆய்வுகள், அணுகுமுறைகள், மற்றும் உத்திகளில் பயிற்சியளித்தல்.
- நடைமுறையில் உள்ள மொழிக்கல்வி அணுகுமுறைகள் மற்றும் உத்திகளை மற்ற மொழிக் கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் போன்றோரிடமிருந்து கற்று அதை நம் தமிழ்க்கல்விக்கேற்ப அமைத்து, ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து, தமிழ்க்கல்வியை நம் மாணவர்களுக்கு சிறப்புடன் அளித்தல்.
5. அடுத்த தலைமுறையினரைக் கொண்டு தமிழ்க்கல்வியை எடுத்துச் செல்ல வழிவகுத்தல்.
- நம் பள்ளியில், தமிழ்க்கல்வி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகளில் உதவும் வகையில் பயிற்சியளித்தல்.
- அவர்கள் கருத்துக்களையும் இத்தலைமுறையினருக்கு பிடித்த வழிமுறைகளைப் பற்றியும் அறிந்து செயல்பட அவர்களை பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சிகளில் ஈடுபடுத்துதல்.
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு
உலகத் தமிழ்க்கல்விக் கழகம் மேற்கூறியுள்ள திட்டங்களை நிறைவேற்றவும் அதற்கு தேவையான அடித்தளம் அமைக்கவும், மற்ற தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழறிஞர்களுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை நடத்தி வருகிறது.காலத்தின் தேவைக்கேற்ப, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழைக்கற்பிக்க இம்மாநாடுகள் உறுதுணையாக இயங்கும் என்றும் ஆணித்தரமாக நம்பப்படுகிறது.
- முதல் மாநாடு – 2012ஆம் ஆண்டு கலிஃபோர்னியா, அமெரிக்காவில் நடைபெற்றது.
- இரண்டாவது மாநாடு – 2016ஆம் ஆண்டு கலிஃபோர்னியா, அமெரிக்காவில் நடைபெற்றது.
- மூன்றாம் மாநாடு – 2023ஆம் ஆண்டு கலிஃபோர்னியா, அமெரிக்காவில் நடைபெற்றது.
- நான்காம் மாநாடு – ஜூலை 2, 3, 4 & 5 – 2026 | சென்னை, தமிழ் நாடு, இந்தியாவில் நடைபெற உள்ளது.
மாநாட்டின் நோக்கங்கள்
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழ்க்கல்வி தொடர்புடைய கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்களது தமிழ்க்கல்வி தேவையைப் பூர்த்தி செய்வதே. இம்மாநாட்டில் தமிழ்க்கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல், ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், தமிழ் போட்டி நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், மற்றும் தமிழ் பயிலரங்குகள் போன்றவை இடம்பெறும். மேலும்,
- இலக்கணம் கற்றுக்கொடுத்தல், பேச்சுத்தமிழ் மற்றும் எழுத்துத்தமிழைக் கொண்டு செல்லும் வழிமுறைகள், மற்றும் தேர்வு முறைகளைப் பற்றிய வழிகாட்டுதலை ஏற்படுத்துதல்.
- அயலத் தமிழ் ஆசிரியர்களுக்கு மொழிக்கற்பித்தல் முறைகளை கற்க வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தல்.
- தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு மற்ற தமிழ்ப் பள்ளி மற்றும் மற்ற மொழி ஆசிரியர்களோடு சந்தித்து பேச வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தல்.
- நம் மாணவர்களுக்கு அவர்கள் தமிழ் திறனையும், அதன் பண்பாட்டைப் பற்றிய புரிதலையும் வெளிப்படுத்த ஒரு தளம் அமைத்துக்கொடுத்தல்.
- தமிழ் மொழி, அதன் வரலாறு மற்றும் தமிழ்ப் பண்பாடு போன்றவற்றை அனைவரும் அறிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- மொழிக்கல்விக்கு பயன்படும் கருவிகள், பாடப் பொருட்கள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் பொருட்களை அனைவருக்கும் அறிமுகம் செய்ய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான தேவைகள்
இம்மாநாட்டில் புலம்பெயர் மொழிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மொழிக்கற்பிக்கும் அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றை மேலும் கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதோடு மற்ற மொழிக் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து செயல்பட தேவையான வாய்ப்பையும் சூழலையும் உருவாக்கித் தரப்படும்.
புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான தேவைகள்
நம் மாணவர்களுக்கு அவர்கள் தமிழ் திறனையும், பண்பாட்டைப் பற்றிய புரிதலை வெளிப்படுத்த ஒரு தளமும் அமைத்துக்கொடுக்கப்படும். மாநாட்டில் மொழிச் சார்ந்த சூழலும் தமிழ் பேசுபவர்களிடம் பயிற்சிப் பெறத் தேவையான நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். மாணவர்கள் மொழிப் பற்றி மேலும் அறிய தேவையான தமிழ் மொழிச் சூழலும் உருவாக்கப்படும். புலம்பெயர் தமிழ்ப்பிள்ளைகளை மேலும் தமிழ் கற்கத் தூண்டும் விதமாக விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்குமான நிகழ்ச்சிகள்
தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் இசை போன்றவற்றை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கொண்டுசெல்லும் நிகழ்ச்சிகளும், தமிழை தங்கள் பிள்ளைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகளும், மேலும் தமிழ்க்கல்வி பணிகளில் பங்குபெறுவதன் அவசியம் குறித்த நிகழ்ச்சிகளும், தமிழ்க் கல்வியில் பெற்றோர் பங்கு பற்றி விளக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமன்றி மற்ற அனைத்து தமிழ் தொடர்புடையவர்களுக்கும், தமிழ் கற்கவும், தமிழ் மொழி பற்றி மேலும் அறிந்துக்கொள்ளவும், தமிழ்ச் சேவை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை அறியவும் தேவையான நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
கண்காட்சிகள்
- தமிழ் மற்றும் பிறமொழிகளில் கற்க/கற்பிக்க பயன்படும் சாதனங்கள், கருவிகள், பாடப்பொருட்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களது கண்காட்சிகள் நடத்தப்படும்.
- மொழிக்கல்வி முறைகள் / உத்திகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களது கண்காட்சி மற்றும் விளக்க நிகழ்ச்சிகளும், மற்ற மொழிப்பள்ளிகள் பயன்படுத்தும் மொழிக்கல்வி உத்திகள் பற்றிய விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
- அதோடு, தமிழ் மொழி, தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறு, தமிழ்ப் பண்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் காட்சிப்பொருட்கள், விளக்கவுரைகள், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளும் இம்மாநாட்டில் இடம்பெறும்.
முதலாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2012
ஆய்வுக்கட்டுரைகள்
இம்மாநாட்டில் பின் வரும் தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
- அயலகத்தில் தமிழ் என்னும் அமர்வில் மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்க்கல்வி எப்படி நடத்தப்படுகின்றது என்கிற கட்டுரைகள்.
- அயலகத்தில் தமிழ் மொழிச்சூழலும் பாடத்திட்ட உருவாக்கமும் என்னும் அமர்வில் சிங்கப்பூர், கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள் என்கிற கட்டுரைகள்.
- தமிழ் கற்பித்தலில் புதிய உத்திகள் என்னும் அமர்வில் இலக்கணத்தை ஆர்வத்துடன் கற்பித்தல், தமிழல்லாதவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற தலைப்பில் கட்டுரைகள். மற்றும் தமிழை எளிமையாக கற்றுக்கொடுக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், சமூக இணைதளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வழிகளைப் பற்றிய கட்டுரைகள்.
- சிக்கல்களும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் உச்சரிப்பு முறைகள், கலாச்சாரம் பற்றிய அறிமுகம், பேச்சுப் பயிற்சி அளித்தல் போன்ற கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
- தமிழ் கற்கும் ஆர்வத்தை மேம்படுத்துதல் என்னும் பிரிவில் தமிழ்க்கல்வி கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்ப்பது, மாணவர்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துதல், எளிய முறையில் எழுத்துக்கள் கற்றுக்கொடுத்தல், தமிழ்க் கற்றலில் மாணவர்களை ஈடுபடுத்துதல் போன்ற பயிற்சிகள்.
- விளையாட்டுகள் மூலமாகவும், மென்பொருள்கள் மூலமாகவும், முகநூல், VoiceThread போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தமிழ் கற்றுக்கொடுக்கும் உத்திகளில் பயிற்சிகள்.
- பேச்சுத்தமிழ் கற்றுக்கொடுக்கும் உத்திகளுக்கான பயிற்சிகள்.
கருத்தரங்குகள்
பேச்சுத்தமிழா, எழுத்துத்தமிழா என்னும் தலைப்பில் தமிழ் அறிஞர்கள் பங்குபெற்ற ஒரு கருத்தரங்கமும், சவால்கள், நோக்கங்கள், சாத்தியங்கள் என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. அதோடு தமிழ்ப் பள்ளி பட்டதாரிகள் அளித்த இளைஞர்கள் பார்வையில் தமிழ்க் கல்வி எனும் தலைப்பிலும் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
மாணவர்களின் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைப் பற்றிய புரிதலை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- தரமான, எளிமையான முறையில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வியை இணையம் மூலமாக உலக அளவில் சாத்தியப்படுத்துதல்.
- பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை சரியான முறையில் கண்டறிந்து மாணவர்களிடம் கொண்டு செல்லுதல்.
- தமிழ் கற்கும் மற்றும் தமிழ் கற்பிக்கும் குழுமங்களுடன் இணைந்து உலகத்தரமான கல்வியை புதிதாக தரப்படுத்தப்பட்ட வழிமுறைகள் மற்றும் கல்வித்திட்டம் மூலமாக அனைவருக்கும் கொண்டு செல்லுதல்.
முதலாம் மாநாட்டின் மூலம் நாம் அடைந்த முக்கியமான நன்மைகள்
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வியை இணையம் வழியாக உலக அளவில் சாத்தியப்படுத்த, மொழி, பண்பாடு, புலம்பெயர்ந்த அனைத்து தமிழர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக வலைவாசல் (Portal) உருவாக்கப்பட்டுள்ளது.
- பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016
முதலாம் மாநாட்டின் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு, இரண்டாவது மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மொழிக்கல்வி பற்றிய அடிப்படை கருத்துக்கள், அதற்கேற்ற பொருத்தமான அணுகுமுறைகள், மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழிக்கல்விக்கான உத்திகள் போன்ற கருப்பொருள்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இம்மாநாட்டில் பின் வரும் தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- மொழிக்கல்வி பற்றியும், மொழி எப்படி ஏற்கப்படுகிறது என்பது பற்றியும் (Language acquisition) ஆய்வு முடிவுகள் மற்றும் மொழியியலாளர்கள் கருத்துக்கள் பற்றிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
- மொழிக்கல்வி அணுகுமுறைகள் – புலம்பெயர் பிள்ளைகளின் சூழ்நிலை மற்றும் மொழிச்சூழலுக்கேற்ப தமிழை அவர்களுக்கு கொண்டு செல்லும் அணுகுமுறைகள் பற்றிய கட்டுரைகளும் பயிற்சிகளும் நடத்தப்பட்டன.
- மொழிக்கல்வி அளிக்கும் உத்திகள் – பரிந்துரைக்கப்பட்ட மொழிக்கல்வி கருத்துகள், மற்றும் அணுகுமுறைகளுக்கேற்ற பயிற்றுவிக்கும் உத்திகள் பற்றிய பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
- பேச்சுத்தமிழா எழுத்துத்தமிழா என்னும் கருப்பொருளிலும் விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
- இலக்கணம் கற்றுத்தரும் வழிமுறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- கற்றதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மாணவர்களுக்கான தமிழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
அடுத்த தலைமுறையினரை தமிழ்க்கல்வி கற்பிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.
இரண்டாம் மாநாட்டின் தீர்மானங்கள்
முதலாம் புலம்பெயர்ந்தோர் மாநாட்டின் மூலம் கற்றவை, மற்றும் பரிந்துரைகளால் மேற்கொண்ட தீர்மானங்கள்,
- தமிழ்ப்பள்ளியின் புத்தகங்கள் அனைத்தையும் மின் புத்தகங்களாக மாணவர்களுக்கு அளிப்பது.
- உலகத்தமிழ் கழகத்திற்கென பாடத்திட்டத்தை உருவாக்குதல்.
- ஒன்று முதல் வகுப்பு ஐந்து வரை உலகத் தமிழ்க்கல்விக் கழகத்திற்கென புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வகுப்பு ஆறு முதல் வகுப்பு எட்டு வரைக்கான புத்தகங்கள் 2024ஆம் ஆண்டின் முடிவில் தயாராகும்.
- அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்.
- ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர், மலேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளித்தல்.
- அனுபவம் மிக்க ஆசிரியர்களை மட்டுமே கொண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பயிற்றுவிக்கும் முயற்சி எடுக்கப்படும்.
- தமிழ்ப் பள்ளிக்கென வளைகுடாப்பகுதியில் தனி வளாகத்தை உருவாக்கும் முயற்சி எடுக்கப்படும்.
- எங்கள் பள்ளியில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் கற்பிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களை கொண்டு வீட்டுப்பாடத்திற்கு உதவ ஊக்குவித்தல்.
- அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட பாலம் அமைத்தல்.
கடந்த இரண்டு மாநாடுகள் மூலம் நாம் அடைந்த முக்கியமான நன்மைகள்
- ஒலி வழி (Phonics) மூலம் எழுத்துகளைக் கற்பிக்கும் ஒரு பயனுள்ள வழியை எங்கள் ஆசிரியர்கள் கற்றுக் கொண்டனர்.
- அழகாக கதை சொல்வதன் மூலம் மாணவர்களைத் தமிழில் உரையாட செய்வது எப்படி என்று அறிந்து கொண்டோம்.
- எங்கள் புத்தகங்களை வலைதளத்தில் மின்புத்தகங்களாக பதிவேற்றம் செய்துள்ளோம். தற்போது அவற்றை (read along) புத்தகத்துடன் சேர்ந்து படிக்க வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்புத்தகங்களை 2023ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டில் வெளியிடவுள்ளோம்.
- 2017 – 2018ல் முற்போக்குத் தமிழ்க் கல்வி (Progressive method) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை எங்கள் பள்ளி கிளைகளுல் ஒன்றில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் உள்ளோம்.
- இந்த புதிய திட்டத்தின் நோக்கம் தமிழை வெகு இயல்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. மேலும், முற்போக்கு தமிழ்க் கல்வி திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்
- தமிழ் கற்பதை மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் ஆக்குதல்.
- பேச்சுத் தமிழில் உரையாடல் திறனை வளர்த்தல்.
- இந்த புதிய திட்டத்தின் நோக்கம் தமிழை வெகு இயல்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. மேலும், முற்போக்கு தமிழ்க் கல்வி திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்
- கேட்டல் பேசுதல் எழுதுதல் மற்றும் வாசித்தல்.
- நாங்கள் எங்கள் பள்ளியில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ் கற்பிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களை துணை ஆசிரியர்களாக நியமித்துள்ளோம். அவர்கள் மற்ற மாணவர்களுக்கு உதவுவதோடு தமிழ் கற்பிப்பதற்கான கருவிகளை உருவாக்குவதிலும் உதவுகிறார்கள்.
- கதைகள், நாடகங்கள், விளையாட்டுகள் போன்ற வேடிக்கையான செயல்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டு மகிழ்ச்சியுடன் தமிழைக் கற்க உதவுகிறது.
மூன்றாம் புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2023
2016ஆம் ஆண்டு மாநாட்டின் தொடர்ச்சியாக 2023ஆம் ஆண்டு மாநாடு திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மொழிக் கல்வி பற்றிய அடிப்படைக் கருத்துக்கள், அதற்கேற்ற பொருத்தமான அணுகுமுறைகள், மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழிக் கல்விக்கான உத்திகள் போன்ற கருப்பொருள்களில் நிகழ்வுகள் நடந்தேறியது.
மாநாட்டின் மையக்கரு:
- தமிழ் கற்றல், கற்பித்தல்
- கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறன் மேம்பாடு.
இம்மாநாட்டில் பின் வரும் தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் (LSRW), திறன்களை மாணாக்கர் மேம்படுத்திக்கொள்வதற்கும் கற்பித்தலில் ஆசிரியர்கள் சிறந்து விளங்குவதற்கும் பல்வேறு முறைகளும் உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்கான புதிய முறைகளை கண்டறிந்து, அவற்றை தமிழ் கற்பித்தலில் பயன்படுத்துதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிதல்.
ஆய்வுக்கட்டுரை தலைப்புகள்
- மொழி கற்பித்தல் திறன் மேம்பாட்டு உத்திகள்.
- கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் திறன்களை ஒருங்கிணைத்தல் முறைகள்.
- மொழியைக் கையாள்வதற்கான புதிய அணுகுமுறைகள்.
- செயல்பாட்டு அடிப்படையில் கற்றல் உத்திகள்.
மாணவர்களின் கட்டுரை படைப்புகள்
- தமிழ் கற்றலில் எங்கள் அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும்
- நான் ஏன் தமிழ் கற்கிறேன்?
- நான் ஒரு தமிழாசிரியராக இருந்தால்…
பயிற்சிப் பட்டறைகள்
- தடைகளைத் தாண்டிய கருத்து வெளிப்பாட்டிற்கான அணுகுமுறைகளும் உத்திகளும்.
- மாணாக்கர் கற்றலில் முழுமையாக ஈடுபடுவதற்கும் மொழியைக் கையாள்வதற்குமான ஆக்கபூர்வமான கற்பித்தல் முறைகள்.
- புலம்பெயர் நாடுகளில் மொழித்திறன் மதிப்பீட்டிற்காக மேற்கொள்ளப்படும் பயனுள்ள முறைகள்.
- ஆக்கபூர்வமாக கதை சொல்லுதலும், கற்றல் உத்திகளும்.
- சூழ்நிலை அடிப்படையில் இலக்கணம் கற்பிக்கும் உத்திகள்.
மாணவர்கள் கலைநிகழ்ச்சி
உலகத் தமிழ்க்கல்வி கழகத்தின் 25ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
குழு கலந்துரையாடல்
- விவாதம் I: உங்கள் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்வியை எவ்வாறு தொடங்கி இன்று நடத்திவருகிறீர்கள், மேலும் தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்கு என்ன செய்கிறீர்கள்? (ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பிரதிநிதி இந்தக் குழுவில் இடம் பெறுவர்)
- விவாதம் II: புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க முயற்சிக்கும் போது எதிர்கொள்ளப்பட்ட வெற்றிகளும் சவால்களும் (இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளில் உள்ள புகழ்பெற்ற தமிழ்க் கல்வியாளர்கள் பங்குபெறுவர்)
கண்காட்சி
பின்வரும் தலைப்புகளில், கண்காட்சி மூலம் தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு.
- தமிழர்களின் கட்டிடக்கலை
- தமிழர்களின் பண்பாடு
- தமிழர்களின் வரலாறு
அமெரிக்கத் தொழில் அதிபர்கள் கருத்தரங்கு
நம் இளைய தலைமுறையினருக்கு மொழியையும் கலாச்சாரத்தையும் எடுத்துச் செல்வதற்கு எந்தெந்த வகையில் ஆதரிக்கலாம் என்பதைப் பற்றி பேசும் ஒரு கருத்தரங்கம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புத்தக அறிமுக விழா மற்றும் நிறைவு விழா
கடந்த மூன்று மாநாடுகள் மூலம் உலகத் தமிழ்க்கல்விக் கழகம் அடைந்த நன்மைகள்
- நாங்கள், எங்களுடைய பள்ளிகளில் மழலையர் முதல் தொடக்கப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகள் வரை எங்கள் சொந்த புத்தகங்களை உருவாக்கியுள்ளோம்.
- புத்தகத்துடன் சேர்ந்து வாசிக்கும் (Read along) புத்தகங்களையும், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியவை இணையம் மூலம் மழலையர் மற்றும் ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளோம்.
- மழலையர் பள்ளி முதல் 2ஆம் வகுப்பு வரை பேனாவுடன் கூடிய லீப் ரீடர் புத்தகங்களை உருவாக்கியுள்ளோம்.
- மாநாட்டில் இடம் பெற்ற பட்டறை மற்றும் கட்டுரைகளில் இருந்து கற்றுக்கொண்ட, புதிய கற்பித்தல் முறைகளை எங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம்.
- ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ எங்கள் பள்ளியில் பட்டம் பெற்ற மாணவர்களை, ஆசிரியர்களின் உதவியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு கற்பிக்க உற்சாகப்படுத்துகிறோம். இது அவர்களின் புரிதலை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இவர்கள் பள்ளியை சீராக நடத்துவதற்கு மென்பொருளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
- எங்கள் ஆசிரியர்களுக்குப் பல்வேறு நாடுகளில் இருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சி அளித்துள்ளோம்.
- நாங்கள் எங்கள் சொந்த Learning Management System(LMS)ஐ உருவாக்கியுள்ளோம். இது மொழி கற்பதற்கு ஒரு தளத்தை உருவாக்குவதோடு எங்கள் முழு பாடத்திட்டத்தை பயிலவும்,வீட்டுப்பாடங்களை செய்வதற்கான வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
- நாங்கள் தமிழ் பண்பாட்டை பாடத்திட்டம் வழி கற்பித்து அவர்கள் கற்ற திறன்களை ஆண்டுவிழா, கண்காட்சி ஆகிவற்றின் மூலம் வெளிப்படுத்தவும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.
- உலகில் உள்ள தமிழ் பேசும் மாணவர்களை தமிழில் தொடர்பு கொள்ள எங்கள் மாணவர்களுக்கு ஓர் இணையதளம் உருவாக்கி உள்ளோம். மியான்மருடன் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பிற நாடுகளுடன் செயல்படுத்த முயற்சித்து வருகிறோம்.
- அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்பிக்க அமெரிக்காவின் பல மாவட்டங்களில் அனுமதி பெற்றுள்ளோம்.
- தமிழ் இணையக்கல்வி கழகம் எங்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது. இப்புத்தகங்களை உருவாக்க அயல்நாட்டு மொழிக்கான தரநிலை, மாணவர்களின் நிலை, அவர்களின் தேவை போன்ற பல்வேறு விவரங்களை சேகரிக்க உதவி செய்துள்ளோம்.
மூன்றாம் மாநாட்டின் தீர்மானங்கள்
- திருக்குறளை இசையின் மூலம் அறிமுகப்படுத்தி நாங்கள் கற்றுக்கொடுக்கும் திருக்குறள்களை இசை வடிவில் உருவாக்குதல்.
- புதிய செயலியை உருவாக்கி அதன் மூலம் இளைய மாணவர்கள் தமிழை (தமிழ்ப்பாடங்களை) எளிமையாகக் கற்க வழிவகை செய்தல்.
- தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிவரை பயிலும் மாணவர்களுக்கு, எளிய வகையில் தமிழ் இலக்கணம் பயில செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் செயலியை உருவாக்குதல்.
- தமிழில் ஒவ்வொரு வார்த்தைக்கும் மாதிரி (sample) வாக்கியம் கொண்ட பட அகராதியை உருவாக்குதல்.
- தமிழ் இணையக்கல்விக் கழத்தின் மூலம் உரையாடலுக்கான புத்தகங்களை உருவாக்குதல்.
- தமிழ் இணையக்கல்விக் கழத்தின் மூலம் உலகம் முலுவதும் அயலக மாணவர்களுக்கான தேர்வு மையம் உருவாக்குதல்.
- உலகத் தமிழ்க்கல்வி கழகம் முற்போக்கு கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கல்வி முறை மாணவர்களை மையப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறை. இக் கல்வி முறையை உலகத் தமிழ்க்கல்வி கழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லுதல்.
முடிவுரை
தாய்மொழியைக் கற்பது, அதற்கேற்ப நடத்தல், மற்றும் பிறருக்கு கற்பித்தலும் மனிதகுலத்தின் இன்றியமையாத கடமைகளாகும். காலத்திற்கேற்ப, நம் தமிழ்மொழியை வரும் தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல தேவையான பணிகளை இந்த மாநாடு தொடர்ந்து செயல்படுத்தும். மொழி கற்பிப்பதில் உள்ள சாவல்கள், சாத்தியங்கள், அணுகுமுறைகள், உத்திகள் போன்றவற்றை அனைத்துத் தமிழ் பள்ளிகளும் இம்மாநாட்டில் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தரமான கல்வியையும், தமிழர்கள் என்கிற அடையாளத்தோடு வாழ வழிமுறைகளை ஏற்படுத்தவும் இம்மாநாடு ஒரு நல்ல தளமாக அமையும் என்று நம்புகிறோம்.
தமிழ்க்கல்வி உள்ளவரை இந்த மாநாட்டின் பணி தொடரும்.
நான்காம் புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2026
புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். இதை மனதில்கொண்டு கடந்த 27 ஆண்டுகளாக, உலகத் தமிழ்க் கல்விக்கழகம் தொடர்ந்து தனது பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் பாடங்களை விளக்கவும் செய்கிறது.
இன்றைய மாணவர்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றுவரும் அதே வேளையில், பேச்சுத் தமிழ் சில தலைமுறைகளுக்குப் பிறகு மெதுவாக மறைந்து வருவதை நாம் கவனிக்கிறோம். மொரிஷியஸ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நாம் இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறோம். மாணவர்களின் தமிழ் வாசிப்பு, எழுத்துத்திறன் மற்றும் பேச்சுத்தமிழை நாம் எவ்வாறு சமநிலைப்படுத்துவது?
வருகின்ற நான்காவது மாநாடு இந்த தலைப்பில் கவனம் செலுத்தவுள்ளது. மேலும், உலகத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பள்ளி அமைப்பில் படிப்படியாகச் செயல்படுத்தக்கூடிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் பெறுவதிலும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
நான்காம் ஆண்டின் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உலகத் தமிழ்க்கல்வி கழகம்
28ஆவது அகவையில் பெருமையுடன் நடத்தும்
ஜூலை 2, 3, 4 & 5 – 2026 | சென்னை, தமிழ்நாடு இந்தியா.
மேலும் விபரங்களுக்கு
இணையதளம்: https://itadtec.org/